கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சரான டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சராக உடனடியாக பொறுப்பேற்பதோடு அவ்வமைச்சு தொடர்புடைய கடமைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளரும் அமைச்சரவைச் செயலாளருமான டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் கூறினார்.
இதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கடந்த ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி, இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கடந்த மே 28-ஆம் தேதி அறிவித்தார்.
தமது பதவி விலகல் கடிதத்தை டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு அனுப்பிவிட்டதாகவும் மே 29 முதல் ஜூலை 3 வரை தாம் விடுப்பில் இருப்பதாகவும் நிக் நஸ்மி கூறியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் தொடங்கி இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சை வழிநடத்துவதில், ஓர் அமைச்சராக தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
கெஅடிலான் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறியதை அடுத்து நிக் நஸ்மி அமைச்சர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]