கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- வரும் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி 180 நாள்கள் இடைவெளிக்குள் 90 நாள்கள் வரையில் சீனாவிற்கு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ள மலேசியர்களுக்கு விசா விலக்கு அளிக்கப்படுகிறது.
சீனா–மலேசியா பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தத்தின் கீழ் மலேசியா மற்றும் சீன கடப்பிதழை வைத்திருப்பவர்கள் விசா இன்றி இவ்விரு நாடுகளுக்குள் பயணங்களை மேற்கொள்ளலாம்.
நாளை தொடங்கி, ஒவ்வொரு பயணத்தின்போதும் இரு நாடுகளிலும் அதிகபட்சமாக 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக மலேசியாவிற்கான சீன தூதரகம் இன்று அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் சீன அதிபர் சீ ஜின்பிங் கோலாலம்பூருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, சீனா-மலேசியாவிற்கு இடையே விசா விலக்கை நீட்டிக்கும் ஒப்பந்தந்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலா, குடும்பப் பயணங்கள், வணிக விவகாரங்கள், கலாச்சார பரிமாற்றம், சொந்த விவகாரங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் விமான பணியாளரை உட்படுத்திய பயணங்களுக்கு இவ்விசா விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்விரு நாடுகளிலும் தங்கும் கால அவகாசம் 180 நாள்கள் இடைவெளிக்குள் 90 நாள்களுக்கும் மேற்போகாமல் இருக்க வேண்டும்.
இவ்வேளையில், 30 நாள்களுக்கு மேல் தங்கவிருப்பவர்கள் அல்லது பணி, கல்வி, ஊடக நடவடிக்கை அல்லது முன்கூட்டியே அனுமதி தேவைப்படும் எந்தவொரு நடவடிக்கையையோ மேற்கொள்ள நேரிட்டால், அதற்கேற்ற விசா விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக சீன தூதரகம் கூறியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]