Ad Banner
Ad Banner
 பொது

உடனடி போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்தும் கம்போடியாவும் இணக்கம்

28/07/2025 06:27 PM

புத்ராஜெயா, ஜூலை 28 (பெர்னாமா) -- தாய்லாந்தும் கம்போடியாவும் தங்களின் சர்ச்சைக்குரிய எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உடனடி போர் நிறுத்தத்திற்கு இணக்கம் கண்டுள்ளன.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற தாய்லாந்து மற்றும் கம்போடிய பிரதமர்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் அவ்விரு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

புத்ராஜெயா ஶ்ரீ பெர்டானாவில், தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அறிவித்தார்.

''கம்போடியா மற்றும் தாய்லாந்து இரண்டும் பின்வருமாறு ஒரு பொதுவான புரிதலை எட்டின. 2025 ஜூலை 28-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 24.00 மணி முதல் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் எட்டப்பட்டது. பதற்றத்தைத் தணித்து அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான முதல் படி இது,'' என்று அன்வார் கூறினார்.

மாலை 3 மணிக்குத் தொடங்கிய அக்கூட்டத்தில் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சாயாசாயும் கம்போடியப் பிரதமர் ஹன் மானெடும் கலந்து கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, அவ்விரு தலைவர்களை அன்வார் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து, உடனடி போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவும், இரு தரப்பின் சர்ச்சைகளைத் தீர்க்க விவாதிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)