Ad Banner
Ad Banner
 பொது

பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி

28/07/2025 07:44 PM

கோலாலம்பூர், ஜூலை 28 (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலேவிடம் அவரின் நியமனக் கடிதத்தை வழங்கினார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நாட்டின் தலைமை நீதிபதியின் நியமனக் கடிதம் வழங்கும் சடங்கில் அவர் பதவி உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

இதற்கு முன்னர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த 62 வயதுடைய டத்தோ வான் அஹ்மாட், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட்-க்கு பதிலாக நாட்டின் 17ஆவது தலைமை நீதிபதியாக வான் அஹ்மாட் நியமிக்கப்பட்டார்.

பிரதமரின் ஆலோசனையின் படி, மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்து, கூட்டரசு அரசியலமைப்பின் சட்டவிதி 122B பிரிவு (1)-இன் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

இச்சடங்கில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூசோஃப், சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)