கோலா திரெங்கானு, 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- திரெங்கானு, யூ தீவில் டெய்ஸி பாய்க்கப்பல் மூழ்கியதை அடுத்து, காணாமல் போன மற்றொரு துருக்கி நாட்டவரான எசர் டெமிர்கோலை தேடி மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது.
காணாமல்போன, படகையும் அந்நபரையும் தேடும் பணி, தற்போது 73.5 சதுர கடல் மைல்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரெங்கானு மாநில மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், மெரிடிம் மலேசியா இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தேடல் நடவடிக்கையில், மெரிடிம் மலேசியா மற்றும் கடல் போலீசாரும் முழு வீச்சில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்தக் கப்பலில் பயணித்த 52 வயது கேப்டன் அஹ்மத் வோல்கன் அட்டா, 42 வயது ஏட்ஸ் டெமிரோரன் மற்றும் 52 வயது எசர் டெமிர்கோல் ஆகியோர், கடந்த திங்கட்கிழமை மலேசியாவில் இருந்து தங்கள் நாட்டை நோக்கி செல்லும் முன், கண்டம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை மாலையில் அந்தக் கப்பல் புயலால் தாக்கப்பட்டு, யூ தீவு அருகே மூழ்கியதாக நம்பப்படுகிறது.
அவர்களில், டெமிரோரன் கடந்த வியாழக்கிழமை பிற்பகலில், உள்ளூர் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில், கடலில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வோல்கன் அட்டா அதே நாள் இரவில் உள்ளூர் மீன்பிடி படகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)