Ad Banner
Ad Banner
 பொது

சாரா உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது

10/08/2025 01:20 PM

கோத்தா கினபாலு, 10 ஆகஸ்ட் (பெர்னாமா) - நேற்று தோண்டி எடுக்கப்பட்ட சாரா கைரினா மஹாதீர் உடலின் பிரேத பரிசோதனை கோத்தா கினபாலுவில் உள்ள  Queen Elizabeth I மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. 

பிரேத பரிசோதனைக்கு முன்னதாக, CT SCAN மேற்கொள்ள நேற்றிரவு மணி 10.30 அளவில் சாராவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

காலை மணி 8.26 அளவில், சாராவின் தாயார் நோராய்டா லாமாட், தமது குடும்பத்தைப் பிரதிநிக்கும்  வழக்கறிஞர்கள் ஹமிட் இஸ்மாயில் மற்றும் ஷாஃவ்லான் ஜுஃப்ரி ஆகியோருடன் மருத்துவமனைக்கு வந்தது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

வழக்கின் அண்மைய முன்னேற்றங்களை தெரிந்து கொள்ள காலை மணி 8 தொடங்கி மருத்துவமனை வளாகத்தில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கூட தொடங்கினர்.

குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர், தடயவியல் மற்றும் மத அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சபா, சிபிதாங்கில் உள்ள தஞ்சோங் ஊபி இஸ்லாமிய மையத்து கொல்லையில் மேற்கொள்ளப்பட்ட சாராவின் உடலை மீண்டும் தோண்டி எடுக்கும் பணி இரவு மணி 7.15 க்கு நிறைவு பெற்றது.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை மணி நான்கு அளவில் சபா பாப்பாரில் உள்ள தங்குமிட வசதிகொண்ட பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து 13 வயதுடைய சாரா கைரினா கீழே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)