செங்டு, 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சீனாவின் செங்டுவில் நடைபெற்ற உலக விளையாட்டுப் போட்டியின் வுஷூ பிரிவில், மலேசியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார் நாட்டின் வுஷூ தாரகையான தான் சியோங் மின்.
இந்த விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாகப் போட்டியிட்ட தமக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம் என்றும், இம்மாத தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு இந்த வெற்றி அர்த்தம் சேர்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றியானது, சக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், தொடர்ந்து அவர்களையும் வெற்றியடைச் செய்து, வுஷு விளையாட்டை உலக அரங்கில் உயர்த்த முடியும் என்று 2017 உலக வெற்றியாளரான அவர் கூறினார்.
செங்டுவில் நடைபெற்ற இப்போட்டியில், மலேசியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்தது.
மலாக்காவைச் சேர்ந்த சியோங் மின் வரும் செப்டம்பரில் பிரேசிலில் நடைபெறும் உலக வுஷு வெற்றியாளர் போட்டியில் களமிறங்கும் வேளையில், தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)