கிள்ளான், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருளை உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு மரணத்தை விளைவித்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் மீது இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
காலை மணி 8.52-க்கு அந்த ஆடவர் போலீசாரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டம், செக்ஷன் 15(1)(a) மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம், செக்ஷன் 44(1) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு 20 வயதுக்குட்பட்ட அச்சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை தொடங்கித் தடுத்து வைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த அமிருல் ஹாஃபிஸ் ஒமார் எனும் ஆடவரின் மனைவியும் விசாரணையில் கலந்து கொள்ளக் காலை மணி 9.15 அளவில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில், மது மற்றும் போதைப்பொருளை உட்கொண்ட நிலையில் வாகனத்தைச் செலுத்தி மோட்டார் சைக்கிளை மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்ததாகத் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி லிம் ஜிட் ஹுவே தெரிவித்திருந்தார்.
காலை மணி 11.40 அளவில் நிகழ்ந்த அச்சாலை விபத்தில், 30 வயதான மோட்டார் சைக்கிளோட்டி காரின் கூரை மீது எரியப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, அவர் கூறினார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற ஹொன்டா சிட்டி ரக கார், கிள்ளான் மாநகரத்தை நோக்கி அதிவேகத்தில் சென்றது.
பல வாகனங்களை முந்தி சென்ற அக்கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும், முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)