Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை; ஐ.நா. வரவேற்பு

11/04/2026 03:56 PM

நியூயார்க், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- இன்று தொடங்கி பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. வரவேற்றுள்ளது.

உலக நாடுகளின் நன்மையை கருதி இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை அவ்விரு நாடுகளும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக்  தெரிவித்தார்.

"பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில், வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகளை பொது செயலாளர் (அந்தோணியோ குட்டரேஸ்) வரவேற்கிறார் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பதற்றத்தைத் தணிப்பதற்கும், மீண்டும் பகைமைச் செயல்கள் திரும்புவதைத் தடுப்பதற்கும், நீடித்த மற்றும் விரிவான ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்காக, இந்த அரசதந்திர வாய்ப்பை இரு தரப்பினரும் நல்லெண்ணத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார்," என்றார் அவர்.

ஈரான் - அமெரிக்கா போர் கடந்த ஆறு வாரங்களாக நீடித்த நிலையில் இரண்டு வாரங்களுக்கான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.

இருப்பினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களும் ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து நிலவும் தடைகளும் போர் நிறுத்தம் உறுதியற்றதாக மாற்றியுள்ளது.

இந்நிலையில், இன்று  இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)