Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானுடனான போரை நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கலாம்

15/04/2026 02:09 PM

வாஷிங்டன் டி.சி., 15 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இவ்வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களுக்கு வாஷிங்டன் முற்றுகை விதித்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இவ்வார இறுதியில் பாகிஸ்தானுக்குத் திரும்பக்கூடும் என்று பாகிஸ்தான், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அதற்கான தேதி எதுவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதே ஐக்கிய நாடுகள் சபைக்குக் கிடைத்த அறிகுறி என்று அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகை அமல்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் அதனைத் தாண்டிச் செல்லவில்லை என்றும், ஆறு வர்த்தகக் கப்பல்கள் திரும்பிச் சென்றுவிட்டன என்றும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்குச் செல்லும் அல்லது ஈரானிலிருந்து வரும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த முற்றுகையில், 12க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈடுபட்டிருந்ததாக Centcom தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், அமைதிக்கான வாய்ப்புகளை மேலும் சிக்கலாக்கும் வகையில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவான Hezbollah-வை குறிவைக்கும் விதமாக, இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்தத் தாக்குதலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறி வரும் வேளையில், தொடர்பு இருப்பதாக ஈரான் வலியுறுத்தி வருகிறது.

--பெர்னாமா
    
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]