பட்டர்வெர்த், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தெலுக் ஆயர் தாவாரில் இரு ஆடவர்களுக்கு படுகாயங்கள் ஏற்படும் அளவிற்கு அவர்களை பாராங் கத்தியைக் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த காணொளி நேற்றிரவு தொடங்கி சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நேற்று மாலை மணி நான்கிற்கு பினாங்கு செண்ட்ரல் பகுதியில் அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக, செபெராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிதெண்டன் சி. தர்மலிங்கம் தெரிவித்தார்.
சந்தேக நபர், பாதிக்கப்பட்ட நபரின் விரல் துண்டிக்கும் அளவிற்கு அவரை காயப்படுத்தியதும், அந்நபருக்கு உதவ முன்வந்த மற்றோர் ஆடவரை பின்புறத்தில் தாக்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவ்வாடவருக்கான தடுப்புக் காவல் உத்தரவை தங்கள் தரப்பு விண்ணப்பிக்கும் என்று சுப்ரிதெண்டன் சி. தர்மலிங்கம் கூறினார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 326-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, வீட்டொன்றின் முன்புறம் ஆடவர் ஒருவர் சினத்துடன், அப்பகுதியில் இருந்த பலரைத் துரத்திச் சென்று இருவரைக் கத்தியால் வெட்டும் காட்சிகளுடைய 1 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட காணொளி பரவலாக பகிரப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]