Ad Banner
Ad Banner
 பொது

முதல் நாள் பி.டி.ஆர்; சாலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமில்லை

15/04/2026 04:49 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- பொது சேவை துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும், பி.டி.ஆர் (BDR) கொள்கை அமல்படுத்தப்பட்ட முதல் நாளான இன்று, போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

எனினும், உச்ச நேரங்களில், கிள்ளான் பள்ளத்தாக்கின் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாகவே இருந்துள்ளது.

காலை மணி ஏழு தொடங்கி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, போக்குவரத்தின் வேகம் குறையத் தொடங்கியது. 

எனினும், ஒட்டுமொத்த நிலைமை கட்டுப்பாட்டிலேயே இருந்ததுடன், வழக்கமான வேலை நாளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை என்று, மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் பேச்சாளர் தெரிவித்தார்.

காலை மணி 9.20 அளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து புக்கிட் லன்ஜான், புத்ரா மகோத்தாவில் இருந்து காஜாங், சுங்கை பிசி டோல் சாவடியிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது. 

அதுமட்டுமின்றி, என்.கே.வி.ஈ நெடுஞ்சாலையில், டமான்சாராவில் இருந்து டமான்சாரா உத்தாமாவிற்கு செல்லும் வழி, மற்றும் கெசாஸ் நெடுஞ்சாலையின் புக்கிட் ரிமாவ்வில் இருந்து பெர்சியாரான் Kewajipan, SUKOM-இல் இருந்து அவான் கெச்சில், அவான் பெசாரில் இருந்து கின்ராரா, சன்வேயில் இருந்து பெர்சியாரான் Kewajipan உட்பட பண்டார் பொட்டானிக்கில் இருந்து பண்டாமாரான் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து மெதுவாக இருந்தது. 

ELITE நெடுஞ்சாலையில், புத்ராஜெயாவில் இருந்து புத்ரா ஹைட்ஸ், யூ.எஸ்.ஜே-வில் இருந்து ஷா ஆலம், புத்ரா ஹைட்சில் இருந்து பண்டார் சவுஜானா புத்ரா மற்றும் புத்ராஜெயா - சைபர்ஜெயா டோல் சாவடி உட்பட, கிராண்ட் சாகா (E7) நெடுஞ்சாலையின் பண்டார் துன் ஹுசேன் ஓன்னில் இருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வழிகளிலும் இதேநிலை ஏற்பட்டது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]