புத்ராஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- பொது சேவை துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும், பி.டி.ஆர் (BDR) கொள்கை போன்று நெகிழ்வான பணி முறையை செயல்படுத்துவதைப் பரிசீலிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனியார் துறைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதோடு,செலவீன அழுத்தங்களைத் தணித்து, பணியாளர்களின் உற்பத்தித்திறனையும் மன உறுதியையும் நிலைநிறுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் ஒரு மடானி பொருளாதாரக் கட்டமைப்பையும் தெளிவான கொள்கைகளையும் வழங்கியுள்ளது.
எனவே, இந்தச் சீர்திருத்த முயற்சியால் உருவாகியுள்ள வாய்ப்புகளைத் தனியார் துறை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாக, உள்நாட்டு வருவான வரி வாரிய தினத்தின் 30-ஆம் ஆண்டு கொண்டாட்டத் தொடக்க விழாவில், பிரதமரின் உரையை வாசித்த துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு குறிப்பிட்டார்.
"செலவு அழுத்தங்களின் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில், முதலாளிகள் தங்கள் நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும். பொதுத்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதைப் போல, வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை உட்பட, நெகிழ்வான பணி ஏற்பாடுகளைப் பரிசீலிக்குமாறு முதலாளிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், செலவீன அழுத்தங்களைத் தணிக்கவும், பணியாளர்களின் உற்பத்தித்திறனையும் மன உறுதியையும் பராமரிக்கவும் இது அவசியமாகும்," என்றார் அவர்.
மேற்கு ஆசிய மோதலை குறிப்பிட்டு, அது வட்டார நிலைத்தன்மையில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]