கொல்கத்தா, 06 மே (பெர்னாமா) -- மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக மறுத்து வருகிறார்.
அவரின் அந்நடவடிக்கை மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
''ஏன்? என்ன காரணத்திற்காக? நாங்கள் இன்னும் தோற்கவில்லை. நாங்கள் தோற்றிருந்தால் மட்டுமே நான் பதவி விலகியிருப்பேன். இப்போது அந்தக் கேள்விக்கே இடமில்லை. யாராவது பலவந்தமாகப் பதவியேற்று, நான் பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நடக்காது. இப்போதும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. இது எங்களைத் தோற்கடிப்பதற்கான அவர்களின் பலவந்தமான முயற்சி. அதிகாரப்பூர்வமாக, அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மூலம் எங்களைத் தோற்கடிக்கலாம், ஆனால் தார்மீக ரீதியாக, நாங்கள் தேர்தலில் வென்றோம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்று அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் நீக்கியதாகவும் நீதிமன்றம் சென்ற பின்னரே 32 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் மம்தா தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்ட மன்றங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க 147 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக மொத்தம் 207 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)