பெட்டாலிங் ஜெயா, 14 மே (பெர்னாமா) -- இம்மாதத் தொடக்கத்தில் புச்சோங், பண்டார் கிண்ராராவில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஏழு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவர் மீது இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பல்கிஷ் முஹமட் சிஹான் மீதான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் ஃபாரா அசுரா முஹமட் சாஹாட் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், பல்கிஸ் முஹமட்டிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை நீதிமன்றம் வரும் ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மே 5ஆம் தேதி, சிலாங்கூர், பூச்சோங் பண்டார் கிண்ராராவில் உள்ள மழலையர் பள்ளியில், காலை மணி 9.30-இல் இருந்து 10.40க்குள் முஹமட் எய்டென் ஃபாஹீம் முஹமட் நோர் ஷாபிஃ-கிற்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பல்கிஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை, குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ், அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)