Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஒப்பந்தம் ரத்து; சட்டப்பூர்வ செயல்முறைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு

14/05/2026 04:25 PM

ஜாலான் கொன்லே, 14 மே (பெர்னாமா) -- கடற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பூர்வ செயல்முறைகள் மற்றும் விநியோக நிறுவனத்திடமிருந்து கோரப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மொத்த ஒப்பந்த மதிப்பில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு அதாவது 57 கோடியே 19 லட்சம் ரிங்கிட்டை அரசாங்கம் ஏற்கனவே செலுத்திவிட்டதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

''நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். நிச்சயமாக, நாங்கள் செலுத்திய தொகையை மட்டும் கோர மாட்டோம். மாறாக, இந்த ஒப்பந்த மீறலால் எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் விளைவுகளையும் கோருவோம். எனவே, எழும் அனைத்து சேதங்களையும் நாங்கள் கோருவது பொருத்தமானதாகும். அமைச்சு அளவில், நடவடிக்கை எடுப்பதற்கான செயல்முறையை ஆராய தற்போது எங்களிடம் ஒரு குழு உள்ளது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று, கோலாலம்பூரில், ராணுவப்படை நிதிய வாரியத்தின் அறக்கட்டளைக் கல்வித் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர், முஹமட் காலிட்  அவ்வாறு தெரிவித்தார்.

ஏவுகணை அமைப்பின் விநியோகம் ரத்து செய்யப்பட்டது, அடுத்த டிசம்பரில் பெறப்படவுள்ள முதல் கடலோரப் போர்க் கப்பலான கே.டி. மஹாராஜாலேலாவை ஒப்படைக்கும் அட்டவணையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)