Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்த திருக்குறள் முழக்கம்

18/05/2026 05:56 PM

தஞ்சோங் ரம்புத்தான் , 18 மே (பெர்னாமா) -- உலகப்பொதுமறையான 1,330 திருக்குறள்களையும் ஒப்பித்தல் முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி பேராக் தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

தஞ்சோங் ரம்புத்தானில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, திருக்குறளை ஒப்பித்து சாதனை படைத்திருக்கின்றனர்.

156 தமிழ்ப்பள்ளிகள், 120 இடைநிலைப்பள்ளிகள் மற்றும் 85 தேசியப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திருக்குறளை ஒப்பித்தல் முயற்சியில் ஈடுபட்டனர்.

தமிழ் மொழியை கற்காத இந்திய மாணவர்களிடையே இம்மொழியின் பெருமையை அறிமுகப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் செல்வம் தெரிவித்தார்.

''தமிழ்ப் பள்ளிகளில் கற்காத இந்திய மாணவர்களிடையே தமிழ்மொழி குறிப்பாகத் திருக்குறளின் சிறப்பைப் பிரபலப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த முயற்சி அதில் வெற்றி அடைந்துள்ளது,'' என்று அவர் கூறினார்.

நேற்று காலை மணி 8க்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை இடைவிடாமல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விக்னேஸ்வரன் ஐயப்பன் கூறினார்.

''இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. பெற்றோரின் ஆதரவினால் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்புப் பெற்றது,'' என்று விக்னேஸ்வரன் கூறினார்.

1,330 திருக்குறள்களையும் ஒப்பித்தல் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறிய பின்னர், மலேசிய சாதனை புத்தகத்தின் சான்றிதழ் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)