கோலாலம்பூர், 18 மே (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான 'முட்ரா'-வின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் ஒதுக்கப்படவிருக்கும் 22 கோடி ரிங்கிட் நிதியின் மூலம் சுமார் 10,000 இந்திய தொழில்முனைவோர் பயனடைவார்கள் என இலக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை, இத்திட்டத்தின் மூலம் ஏழு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஈராயிரம் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளதாக, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், மைக்கி தலைவர் டத்தோ ஶ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, வழங்கப்படும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு இன்னும் அதிகமான இந்திய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், MAICCI நாடு முழுவதும் தொடர்ச்சியான விளக்கக் கூட்டங்களை வழிநடத்தவுள்ளதாக டத்தோ ஶ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மேலும், இந்திய தொழில்முனைவோர், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சிடமும் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று அவர் விவரித்தார்.
''அடுத்தக்கட்டமாக பத்து லட்சம் ரிங்கிட் வரையிலான உதவிநிதியைப் பெறுவதற்கான தொழில்துறையில் இந்திய தொழில்முனைவோர் ஈடுபட வேண்டும். செயற்கை நுண்ணறிவு, மின்னியல் & மின்னணு போன்ற தொழில்துறைகளில் உள்ளவர்கள், Brief-i அல்லது SME வங்கியின் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த ஆவணங்களை நீங்கள் மைக்கியிடம் சமர்ப்பிக்கலாம். அமைச்சரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். எந்தவொரு தடையுமில்லை,'' என்றார் அவர்.
அதோடு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களை தொழில்முனைவோர் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் வியூக முன்னெடுப்பாக இந்த 'முட்ரா' திட்டம் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இளைய தொழில்முனைவோர், பெண் தொழில்முனைவோர் மற்றும் இந்தியக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அடித்தட்டு அளவிலான தொழில்முனைவோரைச் சென்றடைவதற்கான ஒரு முக்கிய தளமாக 'முட்ரா' திட்டம் உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]