Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

18/05/2026 06:08 PM

சென்னை , 18 மே (பெர்னாமா) -- பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் 83 வயதான கே.ராஜன் நேற்று தற்கொலை செய்து கொண்டதைத் தமிழ்நாட்டு போலீஸ் உறுதிப் படுத்தியிருக்கிறது. 

திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.

தமிழ் திரைத்துறையின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த கே.ராஜன் கடந்த 1983ம் ஆண்டு ‘பிரம்மச்சாரிகள்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். 

அமெரிக்கா

அமெரிக்கா, ஐடஹோ மாநிலத்தில் விமானப்படை கண்காட்சியில் ஈடுபட்டிருந்த இரு போர் விமானங்கள்  நடுவானில் மோதிக் கொண்டன.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இவ்விபத்தில், நான்கு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவத்தால் விமானக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதுடன், விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அந்தத் தளம் மூடப்பட்டது.

மெக்சிகோ

மத்திய மெக்சிகோ மாநிலமான பொய்பலாவில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத ஆடவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பூர்வக்குடி சமூகத்தைச் சேர்ந்த  ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.

குடும்பத்தில் எழுந்த பிரச்சினையால் இத்தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.

சீனா

சீனா, குவாங்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுத்தினால், மூவரைக் காணவில்லை.

காயமடைந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் ஒன்பது வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

சீனா

மற்றொரு நிலவரத்தில், சீனாவின் தென்மேற்கில் உள்ள குவாங்சியில் வெள்ளமும் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதிக்கு  அவசர மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டதாக சி.சி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 15 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு டிரக் வெள்ளம் சூழ்ந்த ஆற்றில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன பயணிகளைத் தேடும் பணி தொடர்கிறது.

வார இறுதியில் தெற்கு சீனாவில் பெய்த கனமழையால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)