சிரம்பான், 05 ஜூன் (பெர்னாமா) -- 16-வது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் 36 தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.
நேற்று, வியாழக்கிழமை இரவு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அதன் தொடபான அறிவிப்பைச் செய்தார்.
இதன்மூலம், கடந்த சில வாரங்களாக அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்து நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
''இன்று இரவு மணி 8.30க்கு மாட்சிமை தங்கிய மன்னரையும், அரசரையும் சந்தித்தப் பின்னர், நாளை, 2026ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி முதல் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அவர் தமது ஒப்புதல் அளித்துள்ளார்,'' என்றார் அவர்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதைத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை, விரைவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அமினுடின் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கான தேதி, பிரச்சாரக் காலம் மற்றும் வாக்களிப்பு தினம் உள்ளிட்ட மாநிலத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகளை நிர்ணயிப்பதே இதன் நோக்கமாகும்.
''நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. நெகிரி செம்பிலான் முழுவதும் உள்ள 36 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்,'' என்றார் அவர்.
அதேவேளையில், நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]