சியோல், 07 ஜூன் (பெர்னாமா) -- தென்கொரிய உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறி, சியோலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, கடந்த சில நாள்களாகத் தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாக்குச் சீட்டுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மக்களிடையே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அதிருப்தி நிலவியது.
தலைநகர் சியோலில் உள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகே ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்குச்சீட்டுகள் பற்றாக்குறையால் சிலரால் வாக்களிக்க முடியாமல் போனதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
14,300 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீர்ந்துவிட்டதாகவும், 22 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேயர்கள், மாநில ஆளுநர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த புதன்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)