ஜோகூர் பாரு, 28 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலில் இம்முறை நம்பிக்கை கூட்டணி, பி.எச் (PH) அனுபவமிக்க மற்றும் புதிய இளம் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
அம்மாநிலத்திற்கு வலுவான மற்றும் திறமையான தலைமைத்துவத்தை வழங்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் ஜ.செ.க தலைவர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜ.செ.க சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களில் அனுபவமிக்க மூத்த தலைவர்களும், புதிய இளம் வேட்பாளர்களும் அடங்குவர்.
மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் பொருட்டு நடப்பில் இருக்கும் தலைவர்களுடன் புதிய இளம் தலைவர்களையும் அந்த கட்சி அடையாளம் கண்டுள்ளதாக தியோ மேலும் தெரிவித்தார்.
''இது அனுபவமும் இளமையும் சமநிலையுடன் உள்ள ஒரு அணியாகும். எங்களிடம் அதிக அனுபவம் கொண்ட மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக எந்த அனுபவமும் இல்லாத இளம் உறுப்பினர்களுக்கு வழிகாட்டுவார்கள். இந்த வேட்பாளர் பட்டியல் ஜசெக கட்சியில் மூத்தவர்களும் இளையவர்களும் இணைந்து வலுவான அணியாக இருப்பதை காட்டுகிறது,'' என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், தாமான் பெலாங்கி இண்டாவில் N.45 Stulang சட்டமன்றத்தில் போட்டியிடும் ஜ.செ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]