பொது

உரிமம் இன்றி சருகுமானின் பாகங்கள் வைத்திருந்ததாக எண்மர் மீது குற்றச்சாட்டு

18/04/2024 06:24 PM

சிரம்பான், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான சருகுமானின் எட்டு பாகங்களை உரிமம் இன்றி வைத்திருந்த குற்றத்திற்காக மத்திய சேமப்படை, FRU-வின் எட்டு உறுப்பினர்கள் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
   
நீதிபதி, மஸ்னி நாவி (MAZNI NAWI) முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, 36-லிருந்து 50 வயதிற்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் மறுத்து விசாரணை கோரினர்.

RUSLI CHE OMAR, JAFRI MD TAIB, MOHAMED KHALID IBRAHIM, AZARUDDIN YAHAYA, MOHD IZAMMUDIN ZAINOL, MOHD YUSOF MOHAMED YUNOS, MAHADZIR OSMAN மற்றும் JASIUS JOSEPH ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, நண்பகல் ஒரு மணியளவில், KUALA PILAH, EMPANGAN TALANG சாலையில், வாகனம் ஒன்றின் பின்புறத்தில் குளிரூட்டும் பெட்டியில் சருகுமானின் எட்டு பாகங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டம் 716 அல்லது 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், செக்‌ஷன் 60(1)-ரின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

தலா ஒருவருக்கு 2,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)