பொது

சபாவில் வறிய நிலை & குடியுரிமை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

20/04/2024 06:26 PM

கோத்தா கினபாலு, 20 ஏப்ரல் (பெர்னமா) -- சபா மாநிலத்தில் வறிய நிலையை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்று என்றாலும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மடானி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

தமது தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான் நெருங்கிய உறவு, அந்த உறுதியை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார். 

மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டைக் கொண்டு வருவது மட்டுமின்றி, சபாவிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

நாங்கள் வளர்ச்சியை உந்தச் செய்கிறோம். முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு ஒரு பெரிய தார்மீக பொறுப்பு உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வறிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அதில் சபாவும் அடங்கும் என்றார் அவர்

இன்று, கோத்தா கினபாலுவில் சபா மாநில ஆளுநர்,துன் ஜுஹார் மஹிருடின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த தேசிய அளவிலான 2024 மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூசோப் மற்றும் மாநில முதலமைச்சர் ஹாஜிஜி நோரும் கலந்து கொண்டனர்.

சபாவில் தற்போது வறிய நிலையில் இருக்கும் குடும்பங்கள் தற்போது 11 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

அதோடு, குறுகிய காலத்தில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க, பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) உள்ளிட்ட அரசு கேந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)