உலகம்

கடினமான முடிவை எடுத்த பைடனை பாராட்டுகிறேன் - ஒபாமா 

22/07/2024 06:07 PM

வாஷிங்டன், 22 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். 

தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜோ பைடனின் செயல்திறன் உள்ளிட்டவற்றை விமர்சித்து சொந்தக் கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர். 

ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிவந்தனர். இந்நிலையில், அவரது அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதனிடையே, அவரது இந்த முடிவை உலகத் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். 

குறிப்பாக,  பைடனின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பெரிதும் பாராட்டி வரவேற்றிருக்கின்றார்.

"ஜோ பைடன் அமெரிக்காவின் முக்கிய அதிபர்களில் ஒருவர். 16 ஆண்டுகளுக்கு முன்னர் நான் துணை அதிபரைத் தேடியபோது பொதுச் சேவைத் துறையில் சிறந்து விளங்கிய ஜோவைப் பற்றி அறிந்தேன். அவரது குணம், ஆழமான புரிந்துணர்வு, மன உறுதி ஆகியவை என்னைக் கவர்ந்தன," என ஒபாமா அவரது சமூக ஊடகப் பக்கங்களில் தமது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

அதேவேளையில், "ஜோ அதிபர் பொறுப்பை இன்னொருவரின் கையில் ஒப்படைக்க முன்வந்தது மிகக் கடினமான முடிவு. அந்த முடிவு அமெரிக்காவுக்குச் சிறந்தது என்று அவர் நினைத்திருக்கிறார். இதுவே அவர் நாட்டின் மீது வைத்துள்ள பற்றைக் காட்டுகிறது," என்றார்  ஒபாமா அதில் குறிப்பிட்டுள்ளார். 

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)