பொது

217-வது போலீஸ் தினம்; ஶ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயத்தில் பிரார்த்தனை

20/04/2024 08:13 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- தனது 217-ஆம் நிறைவாண்டை கடந்த மார்ச் 25-ஆம் தேதி கொண்டாடியது நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் படைகளில், முதல் வரிசையில் நிற்கும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்.

அவ்வகையில், பி.டி.ஆர்.எம்-இன் இந்து உறுப்பினர்கள் இத்தினத்தையொட்டி கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையமான PulaPol-இல் அமைந்துள்ள ஶ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயத்தில் நேற்று பிரார்த்தனையை மேற்கொண்டனர். 

தற்போது பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பதவி ஓய்வுப் பெற்ற உறுப்பினர்கள் என சுமார் 600 பேர் இந்த வருடாந்திர பிரார்த்தனையில் கலந்து கொண்டதாக புக்கிட் அமான், குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் வியூகத் திட்டமிடலுக்கான துணை இயக்குநர் டி.சி.பி டத்தோ குமரன் கருப்பண்ணன் கூறினார். 

நேற்று மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய இப்பிரார்த்தனை போலீஸ் தினத்தை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார். 

இதனிடையே, இந்து போலீஸ் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு நிர்மானிக்கப்பட்ட இந்த ஶ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயம் இதுபோன்ற பிரார்த்தனைகளையும் பூஜைகளையும் மேற்கொள்வதற்கு தங்களுக்கு மிகவும் பேருதவியாக அமைவதாகவும் டி.சி.பி டத்தோ குமரன் குறிப்பிட்டார். 

பிரார்த்தனை மிகவும் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்று தெரிவித்துக் கொண்ட அவர் நாட்டின் பொது அமைதியைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றுவர் என்றும் உறுதியளித்தார். 

இப்பூஜையில் சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டி.சி.பி டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் உட்பட பல உயர் அதிகாரிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]