உலகம்

தென்னாப்பிரிக்கா: இராணுவப் பயிற்சி பெறுவதாக நம்பப்படும் லிப்யர்கள் கைது

27/07/2024 07:09 PM

தென்னாப்பிரிக்கா, 27 ஜூலை (பெர்னாமா) -- இரகசிய இராணுவப் பயிற்சி முகாம் என்று சந்தேகிக்கப்படும் முகாம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 95 லிப்ய நாட்டவரை தென்னாப்பிரிக்க போலீசார் கைது செய்தனர்.

ஜொஹனஸ்பெர்க்கில் இருந்து வடகிழக்கே சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புமலங்கா மாகாணத்தின் வைட் ரிவர் எனும் பகுதியில் உள்ள பண்ணையில் இம்முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது.

அச்சோதனையைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிற பகுதிகளில் மேலும் சட்டவிரோத தளங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாவலர்களாகப் பயிற்சி பெறுவதற்காக கல்வி விசாவில் தாங்கள் தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைந்ததாக லிபியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் விசாரணைகள் காட்டுவதை தேசிய போலீஸ் பேச்சாளர் அட்லெண்டா மத்தே X சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்பண்ணையின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டு அமலாக்க அதிகாரி ஜேக்கி மெஷி கூறினார்.

புமலங்கா மாகாணத்தின் மற்ற இரு நகரங்கள் அருகிலும் இதுபோன்ற இரகசிய முகாம்கள் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]