உலகம்

வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம்; 16 பேர் பலி

02/07/2024 08:09 PM

அசாம், 02 ஜூலை (பெர்னாமா) -- இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பாதுகாப்பு கருதி, சுமார் மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய இராணுவம் உதவி வருகிறது.

இவ்வாண்டு கணிக்கப்பட்ட மழையை விட, அதிகமான அளவில் மழைப் பொழிவு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தில் செல்லும் பிரம்மபுத்திரா ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், அந்த ஆற்றைச் சுற்றி வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிரம்மபுத்திரா ஆற்றைச் சுற்றி சுமார் 2000 கிராமங்கள் உள்ளன.

2021-ஆம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியாவில் அசாம் மாநிலம் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.

இதனிடையே, மெக்சிக்கோவில் வீசிய பெரல் சூறாவளியினால், அந்நாட்டின் பல மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மணிக்கு 250 கிலோ மீட்டர் வீசிய சூறாவளியினால், பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமுற்ற நிலையில், சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)