உலகம்

இங்கிலாந்து பொதுத் தேர்தல்; 14 ஆண்டுகளுக்கும் பிறகு கன்சா்வேட்டிவ் கட்சி படுதோல்வி

05/07/2024 04:57 PM

லண்டன், 5 ஜூலை (பெர்னாமா) -- இங்கிலாந்து பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சா்வேட்டிவ் கட்சி படுதோல்வி கண்டுள்ளது.

கணிக்கப்பட்டது போலவே எதிர்கட்சியான கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 320-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை தொழிலாளர் கட்சி பெற்றதன் வழி, கீர் ஸ்டார்மர் பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது.

இங்கிலாந்தின் 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு நேற்று நடைபெற்றது.

மந்தமான பொருளாதார வளர்ச்சி, அரசாங்கத்தின் சிக்கனம் மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி போன்றவற்றினால் இத்தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக முன்னதாக கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன.

அதோடு, எதிர்கட்சியான கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டிருந்தது.

நேற்று வாக்களிப்பு நிறைவடைந்த வேளையில், வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியதிலிருந்து அதிக வாக்குகளைப் பெற்று தொழிலாளா் கட்சியே முன்னிலை வகித்தது.

இந்நிலையில், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 5 மணியளவில் தொழிலாளா் கட்சி 326 தொகுதிகளில் வெற்றி பெற்றது உறுதிசெய்யப்பட்டது.

இதன்வழி, அக்கட்சியின் வெற்றி உறுதியாகி உள்ளது.

இதனிடையே, தமது வெற்றி குறித்து கருத்துரைத்த கீர் ஸ்டார்மர், கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சியின் சீரமைப்பு பணிகள் உட்பட கட்சிக்காக அயராது உழைத்த அதன் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

"வரவேற்பிற்கு நன்றி. என்ன ஒரு அற்புதமான வரவேற்பு. நாம் சாதித்து விட்டோம். நீங்கள் அதற்காகத்தான் பிரச்சாரம் செய்தீர்கள். நீங்கள் அதற்காகத்தான் போராடினீர்கள். நீங்கள் அதற்காகத்தான் வாக்களித்தீர்கள். தற்போது அந்த நேரம் வந்து விட்டது. மாற்றம் இப்போது தொடங்குகிறது. அது (மாற்றம்) சுலபமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கவில்லை. ஒரு நாட்டை மாற்றுவது என்பது உடனடியான நடத்தக்கூடிய காரியமல்ல. அது ஒரு கடின உழைப்பு. அது ஒரு பொறுமையான வேலை. உறுதியான வேலை. அதோடு, நாம் உடனடியாக செயல்பட வேண்டும்," என்றார் அவர்.

தாம் போட்டியிட்ட ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பாங்க்ராஸ் தொகுதிகளில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர், வெள்ளிக்கிழமை இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)