உலகம்

காசா மக்களுக்கு போதிய உதவிகள் சென்றடையவில்லை - ஐ.நா. மீண்டும் புகார்

11/07/2024 06:30 PM

நியூயார்க், 11 ஜூலை (பெர்னாமா) -- போரினால் காசாவில் அவதியுறும் மக்களுக்கு போதிய உதவிகள் சென்றடையவில்லை என்று ஐ.நா. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

கெரெம் ஷாலோம் எல்லை வழி கொண்டு செல்லப்படும் உதவிப் பொருட்கள் காசா மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்று ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்  தெரிவித்திருக்கிறார்.

போர் மற்றும் காசாவில் இஸ்ரேலிய படைகளுடன் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் உதவிப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

''அவர்களில் (காசா மக்கள்) பலர் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இடம்பெயர்ந்தாலும் அல்லது அவர்கள் தங்கினாலும் குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை எல்லா நேரங்களிலும் மதிக்க வேண்டும் என்று கூறும்போது இதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 40,000 லாரிகளுக்கு அனுமதி இருந்தாலும், இதுவரை 26,000 லாரிகள் மட்டுமே இதுவரை காசாவிற்குள் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் தெற்கு காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஐ.நா. செய்து வருவதாக ஸ்டீபன் தெரிவித்தார்.

சிலநேரங்களில் ஐ.நா. மற்றும் தனியார் லாரிகளில் கொண்டு செல்லப்படும் உதவிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)