பொது

சட்டம் 355 திருத்தம்: முழுமையாகவும் விரிவாகவும் செய்யப்பட வேண்டும்

15/07/2024 04:59 PM

புத்ராஜெயா, 15 ஜூலை (பெர்னாமா) -- சட்ட மசோதா 355 அல்லது குற்றவியல் அதிகார வரம்பிற்கான 1965-ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்றச் சட்ட மசோதாவில் திருத்தம், பல்வேறு தரப்பினரின் நிபுணத்துவத்தை உள்ளடக்கி முழுமையாகவும் விரிவாகவும் செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியாளர் மன்றம் கூறியுள்ளது.

அச்சட்டத் திருத்தம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதை உறுதிசெய்ய அந்நடவடிக்கை முக்கியமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்

கடந்த வாரம், சட்ட மசோதா 355 தொடர்பில், எம்.கே.ஐ எனப்படும் மலேசிய இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவருமான சுல்தான் பேராக், சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷாவை தாம் சந்தித்ததாகவும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தானும், முன்னாள் எம்.கே.ஐ தலைவருமான சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவிடமும் தாம், சட்டத் திருத்தம் தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

''இருவரும் நிபுணத்துவச் செயற்குழுவால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், நாங்கள் அதனை முறையாக ஆய்வு செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் அதை நாங்கள் சமர்ப்பித்தவுடன் அது ஒரு திடமான ஆவணமாக மாறும். இது அனைத்து மாநிலங்கள், முஃப்திகள் மற்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என்றார் அவர்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாகிம் மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ டாக்டர் முஹமட் நயிம் மொக்தார் ஆகிய தரப்பினர், அனைத்துலக இஸ்லாமிய நிபுணர்களின் கருத்துகளைப் பெறவும் அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)