ஹலால் தொழில் துறையில் 500 கோடி ரிங்கிட் முதலீடு - சீனாவின் நிறுவனங்கள் தயார்

18/07/2024 07:37 PM

கோலாலம்பூர், 18 ஜுலை (பெர்னாமா) -- சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் நாட்டின் ஹலால் தொழில் துறையில் சுமார் 500 கோடி ரிங்கிட் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஹலால் தொழில் பூங்காவில் அந்த நிறுவனங்களை ஒருங்கிணைக்க சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''சீனாவில் இருந்து முதலீட்டாளர்கள் என்னை அணுகியுள்ளனர். அவர்கள் 500 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாக முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலையான முதலீட்டாளர்கள் கிடைக்கும் வகையில், மாநிலங்களில் உள்ள ஹலால் தொழில் பூங்காவில் அந்த நிறுவனங்களை நிறுவலாம்,'' என்றார் அவர். 

தமது மேற்பார்வையில் அரசாங்கம் மற்றும் மத்திய நிறுவனங்களின் கீழ் நாட்டில் 14 ஹலால் தொழில் பூங்காக்கள் உள்ளன என்று டாக்டர் சாஹிட் தெரிவித்தார்.

மூலிகை அடிப்படையிலான ஹலால் தயாரிப்புப் பொருட்களை தயாரிக்க கைவிடப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யும் பொருட்டு, மாநில அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் மலேசிய ஹலால் மன்றம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]