பொது

டீசலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பிற்கு முன்னர் 65 லட்சம் லிட்டர் டீசல் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

23/07/2024 07:30 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- டீசலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர், நாளொன்றுக்கு குறைந்தது 65 லட்சம் லிட்டர் டீசலை தொழில்துறை தவறாகப் பயன்படுத்தியது, அல்லது அண்டை நாடுகளுக்கு கடத்த முயற்சித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில், பெட்ரோல் நிலையங்களில் இருந்து டீசல் விற்பனை நாளொன்றுக்கு 23 விழுக்காடு, அல்லது 65 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது, டீசலுக்கான உதவித் தொகை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதில் தெரிய வந்துள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியா முழுவதிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், ஜூன் மாதத் தொடக்கத்தில் சராசரி டீசல் விற்பனை நாளொன்றுக்கு இரண்டு கோடியே 86 லட்சம் லிட்டராகும்.

இம்மாதத் தொடக்கத்தில், சராசரி டீசல் விற்பனை நாளொன்றுக்கு இரண்டு கோடியே 22 லட்சம் லிட்டருக்கு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

''அதே காலக்கட்டத்தில், வர்த்தகம் வழியான டீசல் விற்பனை நாளொன்றுக்கு 48 லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பது சம்பந்தப்பட்ட மதிப்பாய்வின் தரவுகளின் முடிவுகள் காட்டுகின்றன. தற்போது பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென்னாகும். இதற்கு முன்னர், உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட டீசலை வாங்கிய தொழில்துறை தரப்பினர் தற்போது மீண்டும் டீசலை வர்த்தக முறையில் வாங்கத் தொடங்கியுள்ளனர்,'' என்றார அமீர் ஹம்சா.

இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை அமலாக்கத்திற்குப் பின்னர், எல்லைப் பகுதிக்கு அருகில், தீபகற்ப மலேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் டீசல் விற்பனை 40 லிருந்து 50 விழுக்காடு வரை சரிவு கண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)