பொது

நிறைவடையும் தருவாயில் நூர் ஃபாராவின் கொலை வழக்கு விசாரணை

24/07/2024 07:04 PM

கோலாலம்பூர், ஜூலை 24 (பெர்னாமா) -- சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், உப்சியின் முன்னாள் மாணவி நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லாவின் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை அவ்வறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான்  தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலும், அது தொடர்பான வேறு சில இடங்களிலும் ஆதாரங்களைக் கண்டறியும் முயற்சிகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஜூலை 17-ஆம் தேதி, அரச மலேசிய போலீஸ் படை, PDRM-இன்  நீர்நிலை தடயவியல் விசாரணைப் பிரிவு கம்போங் ஶ்ரீ கிளெடாங் செம்பனைத் தோட்டத்தில் ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கையின்போது நூர் ஃபாராவுக்கு சொந்தமான விவேக கைத்தொலைப்பேசியைக் கண்டெடுத்தனர்.

அதன் பின்னர், சிலிம் ரிவர் கம்போங் பத்து 4, சுங்கை துரோலாக்கில் அக்குழு மேற்கொண்ட தேடல் நடவடிக்கையின்போது அப்பெண்ணின் கைப்பை கிடைத்தது.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை கொலை செய்யப்பட்ட நபர் பணிபுரிந்த  நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படும் இரண்டு கார் சாவிகள் உட்பட கருப்பு நிற பணப்பையை தேடல் குழுவினர் கண்டெடுத்தனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)