பொது

அடிக்கடி நிகழும் நீர் விநியோகத் தடை; 'ஸ்பான்' விசாரிக்கும்

26/07/2024 02:59 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) -- மாசுபாட்டால் நீர் விநியோக சேவையில் ஏற்படும் தடைகள் குறிப்பாக சிலாங்கூரில் ஏற்படும் சம்பவங்களை விசாரிக்க தேசிய நீர் சேவை ஆணையம், ஸ்பான் (SPAN) ஒரு சிறப்பு செயற்குழுவை அமைக்கவுள்ளது.

மாசுபாட்டினால் ஏற்படும் நீர் விநியோக சேவை தடைகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதற்கும் தகவல்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கும் இந்த செயற்குழு பொறுப்பேற்கும் என்று ஸ்பான் தெரிவித்திருக்கிறது.

நீர் விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய அனைத்து தரப்பினர் பின்பற்றக் கூடிய சிறந்த நடைமுறையை இக்குழு முன்மொழியும் என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஸ்பான் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை உட்பட பல்வேறு தரப்பினரும் அரசு நிறுவனங்களும் தரவு சேகரிப்பு நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடும் என்று ஸ்பான் தெரிவித்துள்ளது.

செம்பா மற்றும் குண்டாங் ஆறுகளில் ஏற்பட்ட மாசுபாட்டு காரணமாக ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சிலாங்கூர் மாநிலம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 7 பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான பயனீட்டாளர்கள் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்டனர்,

அதனை ஸ்பான் கடுமையாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.

அச்சம்பவத்தை தொடர்ந்து, ஜூலை 24-ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் மீது ஸ்பான் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]