பொது

நூர் ஃபாரா கார்த்தினியை கொலை செய்ததாக போலீஸ் உறுப்பினர் மீது குற்றப்பதிவு

26/07/2024 03:21 PM

கோலா குபு பாரு, 26 ஜூலை (பெர்னாமா) -- செம்பனை தோட்டம் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லாவை கொலை செய்ததாக போலீஸ் உறுப்பினர் ஒருவர் இன்று கோலா குபு பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி, காலை மணி ஒன்பதிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி மாலை மணி ஆறுக்குள், உலு பெர்னாம், எஸ்.கே.சி கிலேடாங் செம்பனைத் தோட்டத்தில் நூர் ஃபாரா கார்த்தினியை கொலை செய்ததாக பேராக்கில் பணிபுரிந்து வரும் 26 வயதான லான்ஸ் காப்பெரல் முஹமட் அலிஃப் மொன்ஜானி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-டின் கீழ் முஹமட் அலிஃப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மரண தண்டனை சம்பந்தப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் நீதிபதி நூருல் மார்டியா முஹமட் ரெட்சா முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அந்நபரிடம் இருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

மரபணு பரிசோதனை மற்றும் தொலைதொடர்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் இவ்வழக்கை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]