பொது

போதைப் பொருள் விநியோகம்; இரு இந்தோனேசியர்கள் மீது குற்றச்சாட்டு

26/07/2024 03:54 PM

தெலுக் இந்தான், 26 ஜூலை (பெர்னாமா) -- கடந்த வாரம் 10.61 கிலோ கிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததற்காக இரண்டு இந்தோனேசிய மீனவர்கள் இன்று தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

நீதிபதி இந்தான் நூருல் ஃபரெனா சைனால் அபிடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது புடி ஹெரியன்ஷா மற்றும் ஜஸ்லி ஆகிய இருவரும் அதனைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி இரவு மணி பத்துக்கு, பாகான் டத்தோ மாவட்டத்தில் உள்ள கம்போங் பாகான் சுங்கை தியாங்கின் மீன்பிடி படகு தளத்தில் 10.61 கிலோ கிராம் எடையிலான methamphetamine ரக போதைப் பொருளை விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B உட்பிரிவு (1) மற்றும் (a)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதேச் சட்டம் செக்‌ஷன் 39B உட்பிரிவு (2)-இன் கீழ் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதோடு 15-க்கும் குறையாத பிரம்படியும் வழங்கப்படும்.

இதனிடையே, ரசாயன அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பு செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]