அரசியல்

அம்னோ தேர்தல்; கட்சியைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வலியுறுத்து

27/07/2024 05:42 PM

மெர்சிங், 27 ஜூலை (பெர்னாமா) -- அடுத்து வரும் கட்சித் தேர்தலில், பழைய செயல்முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து அதிகம் சிந்திக்காமல் அனைத்து உறுப்பினர்களும் கட்சியைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அம்னோ தலைவர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தியிருக்கின்றார்.

நாடு முழுவதிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள், முதன்மை தலைமைத்துவத்தை தேர்வு செய்ய அனுமதிக்கும் நடப்பு விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு, சிறப்பு பொதுப் பேரவைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் துணைப் பிரதமருமான அவர் தெளிவுப்படுத்தினார்.

''அம்னோ தேர்தல் 2026-ஆம் ஆண்டு நடத்தப்படும். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால், இவ்விவகாரம் சிறப்பு பொதுப் பேரவைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும், ஏனெனில், அது அரசியலமைப்பு திருத்தத்தை உள்ளடக்கியது. அது ஒரு விதிமுறையாக இருந்தால், அது கட்சியின் உச்சமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார் அவர்.

இன்று ஜோகூர், மெர்சிங்கில், சுல்தான் இப்ராஹிம் ஜுப்ளி இந்தான் மண்டபத்தில் நடைபெற்ற மெர்சிங் அம்னோ தொகுதி பேராளர்களின் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட காலம் வரும்போது கட்சித் தேர்தல் முறையில் புதிய விதிகளை வரையறுப்பதற்கான எந்தவொரு நல்ல திட்டத்தையும் திறந்த கொள்கையுடன் ஏற்றுக் கொள்வதற்கு அம்னோ தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)