பொது

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கூட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்படும்

27/07/2024 06:00 PM

வியன்டியேன், 27 ஜூலை (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கூட்டங்கள் கோலாலம்பூரில் மட்டும் இல்லாமல் அதன் கூட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்படும்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில், சுமார் 300 கூட்டங்களை உபசரனை நாடான மலேசியா ஏற்பாடு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளியுறவு அமைச்சர்களின் முதல் கூட்டம், ஜனவரி 18 முதல் 19-ஆம் தேதி வரை கெடா, லங்காவியில் நடைபெறவிருப்பதாக அவர் கூறினார்.

அம்மாநாட்டில், பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று முஹமட் ஹசான் குறிப்பிட்டார்.

மேலும் வட்டார நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு லாவோஸ் ஏற்பாடு செய்த 57-வது ஆசியான் மாநாட்டில் முஹமட் ஹசான் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)