பொது

நீர் பயன்பாட்டை 10 விழுக்காடு குறைக்குமாறு பினாங்கு மாநில பயனீட்டாளர்களுக்கு வேண்டுகோள்

27/07/2024 06:19 PM

பினாங்கு, 27 ஜூலை (பெர்னாமா) -- கோடைக் காலத்தினால் நீர் கையிருப்பு குறைந்து வருவதால், அடுத்த செப்டம்பரில் தொடங்கும் மழைக்காலம் வரையில் 10 விழுக்காடு நீர் பயன்பாட்டைக் குறைக்குமாறு பயனீட்டாளர்களுக்கு பினாங்கு நீர் விநியோகக் கழகம், PBAPP வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில், பினாங்கில் சராசரி நீர் பயன்பாடு ஒரு நாளைக்கு 88 கோடியே 70 லட்சம் லிட்டர் என்று PBAPP-இன் தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 87 கோடியே 70 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டது.

தரவுகளின்படி, பினாங்கு மாநிலத்தில் நீரின் பயன்பாடு, ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடி லிட்டராக அதிகரித்து வருகிறது.

ஒரு நாளைக்கு 6,667, 1.5 லிட்டர் அளவிலான குடிநீர் பாட்டில்களை நிரப்பக்கூடிய நீரின் எடையைக் அது குறிக்கிறது.

கடந்த ஜனவரி முதல் ஏற்பட்டிருக்கும் குறைவான மழைப் பொழிவு, அம்மாநிலத்தின் நீர் விநியோகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

அதோடு, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரின் உற்பத்தியும் குறைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)