பொது

பேராக்: 6 மாதங்களில் 27 லட்சம் ரிங்கிட் நிதி விநியோகிப்பு

27/07/2024 06:37 PM

ஈப்போ, 27 ஜூலை (பெர்னாமா) -- பேராக்கில் உள்ள இந்து ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 27 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், அம்மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கி வந்த நில விவகாரங்களுக்கும் 80 விழுக்காடு தீர்வுக் காணப்பட்டுள்ளதாக பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ.சிவநேசன் தெரிவித்தார். 

''வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சிடம் கூடுதல் ஆறு லட்சம் ரிங்கிட் நிதியை விண்ணப்பித்துள்ளோம். அத்தொகை கூடியவிரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார் அவர்.

இதன்மூலம், இன்னும் உதவித் தொகையைப் பெறாத ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கு அத்தொகை வழங்கப்படும் என்று அ.சிவநேசன் நம்பிக்கைத் தெரிவித்தார். 

இந்து ஆலயங்களுக்கு சுமார் 15 லட்சம் ரிங்கிட், தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 லட்சத்து 15,000 ரிங்கிட், அரசு சாரா இயக்கங்களுக்கு 5 லட்சத்து 61,266 ரிங்கிட் வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

அதோடு, அங்குள்ள பல மாவட்டங்களில் மின் சுடலை அமைக்கும் கோரிக்கையும் முன்வைக்கபட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளிலும் தமது தரப்பு ஈடுபட்டு வருவதை சிவநேசன் குறிப்பிட்டார். 

இன்று, பேராக் மாநில அரசாங்க செயலகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சமுக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உடனான சந்திப்பிற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]