உலகம்

பாகிஸ்தான்; உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

27/07/2024 07:13 PM

இஸ்லாமபாத், 27 ஜூலை (பெர்னாமா) -- பாகிஸ்தானில், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஜமாத் இ இஸ்லாமி கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குச் செல்வதற்கான சாலைகளை போலீசார் மூடியபோதும், நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்றடைந்துள்ளனர்.

மக்களுக்கு வரி விதிப்பின் வழி சுமையை அதிகரிக்கப்பதாக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் அல் அசீம் அரசாங்கத்தைச் சாடியுள்ளார்.

மின்சாரம், எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை அதிகரிப்பினால், அந்நாட்டில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

''பொருட்கள் விலை அதிகரிப்பினால் ஒவ்வொரு வீட்டிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையில் சண்டை ஏற்படுகிறது. செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை. எங்களின் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. நாங்கள் எப்படி தேவைகளைப் பூர்த்தி செய்வது? செலவுகளை விட வருமானம் குறைவாக உள்ளது,'' என்று இல்லத்தரசியான ரசியா சலீம் கேள்வி எழுப்பினார்.

''மின்சாரம், எரிவாயு, பெட்ரோல், மாவு, அரிசி, பருப்பு வகைகள், அரிசி என்று அனைத்தும் விலை அதிகரித்து விட்டன. சமையல் பற்றி சிந்திப்பது மிகவும் கடினமாகி வருகிறது. இந்நிலையில், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பிற தேவைகளைப் பொறுத்தவரை, அவை இன்னும் சிரமம்,'' என்று அரசாங்க ஊழியரான சலீம் அவான் கூறினார்.

இதனால், தங்களின் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)