பொது

பேராக்கில் டெங்கி அபாயம்; மரண எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு

31/07/2024 08:36 PM

ஈப்போ, 31 ஜூலை (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில்  டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வருவது அச்சம் அளிப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் டெங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,975 இருந்த வேளையில் இவ்வாண்டு அது  5,058ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்தாண்டு இதே கால்கட்டத்தில் ஓர் இறப்பு மட்டுமே பதிவாகியிருந்த வேளையில் இவ்வாண்டு அது ஒன்பதாக உயர்ந்துள்ளது என்று கூறிய அவர், அதில் கிந்தாவில் மட்டும் ஏழு மரண சம்பவங்கள் பதிவாகி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

எனவே, பேராக் மாநில மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தை பாதுகாத்து இந்நோயிலிருந்து விடுபட வேண்டும் என்றும் சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசிய அவர், பேராவில் உள்ள பாரிட் புந்தார் மருத்துவமனை அடுத்தாண்டு ஐனவரிக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும் என்று குத்தகையளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

13 கோடியே 70 லட்சம் ரிங்கிட் செலவில், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இம்மருத்துவமனையின் நிர்மாணிப்புப் பணி கடந்த 2018 ஆண்டு தொடங்கப்பட்டது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)