பொது

ரொம்பின் விபத்து: குற்றத்தை மறுத்தார் பேருந்து ஓட்டுநர்

01/08/2024 05:30 PM

ரொம்பின், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி, மரணத்தை விளைவிற்கும் அளவிற்கு கவனக்குறைவாக பேருந்தை செலுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் இன்று ரொம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.

ரொம்பின், ஜாலான் குவாந்தான் - செகாமாட்டின் 126-வது கிலோமீட்டரில் நள்ளிரவு மணி 12.30 அளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக 50 வயதுடைய சம்ப்ரி போன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத அல்லது பத்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 20,000 ரிங்கிட் அல்லது அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வகைச் செய்யும், 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம், செக்‌ஷன் 41(1)-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

5,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டவரை மஜிஸ்திரேட் மெலோடி வூன் சீ முன் விடுவித்தார்.

ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகாக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திரெங்கானுவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ஜூன் ஒன்பதாம் தேதி, மலாக்கா, ஜெராம் மஸ்ஜிட் தானா தேசியப் பள்ளியின் ஆசியர்கள் மற்றும் மாணவர்களைப் பேருந்தில் ஏற்றி சென்று கொண்டிருந்த வழியில் அந்த விபத்து நிகழ்ந்த நிலையில், அதில் நால்வர் உயிரிழந்ததோடு 35 பேர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)