பொது

போலி விலக்கு கடித மோசடி; குற்றத்தை மறுத்தார் தலைமை இயக்குநர்

01/08/2024 05:43 PM

ஷா ஆலம், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், போக்குவரத்து அமைச்சின் அனுமதியின்றி நாட்டின் கடற்பகுதியில் அதிக விலை மதிப்புடைய எண்ணெய்யை கொண்டு வருவதற்கு கப்பல் நிறுவனம் ஒன்றுக்கு விலக்கு கடிதம் அளித்தது தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக மலேசிய மலேசிய கடல் துறை, ஜேஎல்எம்-இன் தலைமை இயக்குநர் கேப்டன் முஹமட் ஹலிம் அஹ்மட் இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

எனினும், நீதிபதி டத்தோ அனிதா ஹருன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை குற்றம் சுமத்தப்பட்ட முஹமட் ஹலிம் மறுத்தார்.

அப்போது, போக்குவரத்து அமைச்சின் கடல்சார் பிரிவுக்கான செயலாளார் பொறுப்பிலிருந்த முஹமட் ஹலிம், ஜேஎல்எம் தலைமை இயக்குநராகப் பதவி வகித்த டத்தோ பஹாரின் அப்துல் ஹமிட் ஏமாற்றியதாகக் குற்றம் பதிவாகியுள்ளது.

அதாவது, 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதியிட்ட போக்குவரத்து அமைச்சின் ஒப்புதல் கடிதத்தை பஹாரினிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் நிலையில், அவ்வாறு ஓர் ஒப்புதல் கடிதம் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 417-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

20,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் முஹமட் ஹலிமை நீதிபதி விடுவித்த நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)