பொது

தியோவின் மரண விசாரணையை துரிதப்படுத்த குடும்பத்தார் பிரதமரிடம் கோரிக்கை

01/08/2024 06:49 PM

புத்ராஜெயா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த 15 ஆண்டுகாலமாக இழுபறியில் இருந்து வரும், தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதன் தொடர்பில், ஜனநாயக செயல்கட்சியைச் சேர்ந்தவரும், சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரின் அரசியல் செயலாளருமாகிய தியோவின் குடும்பத்தார் இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவிலுள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.

விசாரணையை முடிப்பதற்கு 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று பெங் குடும்பத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் டியோ கூறினார்.

குடும்பத்தாரின் விண்ணப்பத்தை செவிமடுத்த பிரதமர் இவ்விவகாரத்தை மிக விரைவில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேனின் பார்வைக்கு கொண்டு செல்லவிருப்பதாக கூறினார் என்று ராம்கர்ப்பால் தெரிவித்தார்.

பெங் ஹோக்கின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் அதேவேளையில், சுதந்திரமான மற்றும் நிபுணத்துவ முறையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தியோ பெங் ஹோக் குடும்பத்தினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன்னர் 30 வயதுடைய தியோ பெங் ஹோக் சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலக கட்டிடத்தில் இருந்து விழுந்து, இறந்ததாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)