உலகம்

இந்தியாவில் அதிகரிக்கும் முதியோரைப் புறக்கணிக்கும் சம்பவங்கள்

01/08/2024 07:13 PM

மும்பை, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முதியோரைப் போற்றுவதில் மிகவும் பிரபலமான நாடுகளில் ஒன்றான இந்தியாவில், தற்போது சொந்த குடும்பமே அவர்களைப் பராமரிக்க மறுத்து, கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

போதுமான வசதிகள் இல்லாததாலும், ஆயுட்காலம் நீழ்வதாலும் அவர்களைப் பராமரிப்பதில் பராமரிப்பாளர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

உலகிலளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், நெரிசலான நகர்ப்புறங்களில் இப்பிரச்சனை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

''இரண்டு மூன்று நாட்களாக டெல்லியில் அலைந்து கொண்டிருந்தேன். உண்பதற்கு உணவு கேட்டு பிச்சை எடுத்தேன். 'நாங்கள் மருத்துவரை அழைத்து வருகிறோம், எனவே இங்கேயே காத்திருங்கள்,’ என்று எனது மகன்கள் கூறி புறப்பட்டனர். அவர்கள் எனக்காகத் திரும்பி வரவே இல்லை,''என்கிறார் கைவிடப்பட்ட முதியவரான ராஜு பூல்ஜாலே.

ஒரு சில இலாப நோக்கற்ற நிறுவனங்கள், கைவிடப்பட்ட முதியவர்களில் சிலரைத் தங்க வைப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து, உதவ முயற்சித்து வருகின்றன.

எனினும், ஒரு சிறிய பகுதியினருக்கே இந்த உதவிகள் வழங்க முடிவதாக அவை கருதுகின்றன.

அவற்றில் ஒன்றான, நான்கு ஆதரவற்றோர் பராமறிப்பு மையங்களைக் கொண்ட செயின்ட் ஹார்டியால் கல்வி மற்றும் ஆதரவற்றோர் சமூகநல மையம், SHEOWS-இல், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் வேளையில், அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினரால் மருத்துவமனைகளிலும் வீதிகளிலும் விட்டுச் செல்லப்பட்ட முதியவர்கள் ஆவர்.

''எங்களிடம் சுமார் 500-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இங்கே வசிக்கிறார்கள். இன்னும், தேவை அதிகம். மக்கள் தொகை அதிகம். ஆதரவு தேவைப்படும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். பாலைவனத்தில் நாங்கள் ஒரு சிறு விதைதான் என்று நான் கூறுவேன். ஆனால் இங்குப் பிரச்சனை மிகவும் பெரியது,'' என்று SHEOWS ஆதரவற்றோர் சமூகநல மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சௌரப் பகத் கூறுகிறார்.

புது டெல்லி போன்ற நகரங்களின் வீதிகளில் கைவிடப்பட்ட முதியவர்களைத் தேடி மீட்கும் மீட்புக் குழுக்கள், அவர்களைக் கண்டதும், முதலில் மருத்துவ பரிசோதனைக்காக அவர்களை கொண்டுச் செல்கின்றனர்.

பின்னர், அவர்களுக்கு துணிமணி, உணவு, தங்குவதற்கான இடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)