விளையாட்டு

விளையாட்டுத் துறையில் மலேசியா இன்னும் மேம்பாடு காண வேண்டும்

15/08/2024 08:03 PM

கோலாலம்பூர், 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பிரான்ஸ், பாரிசில் நடந்து முடிந்த 33-வது ஒலிம்பிக் போட்டியில், இரு வெண்கல பதக்கத்துடன் மலேசியா பட்டியலில் 80-ஆம் இடம் பிடித்திருந்தது

35 ஆசிய நாடுகளின் வரிசையில், அது 18-வது இடத்தைப் பதிவு செய்தது. 

உலகத் தரவரிசையில், மலேசியாவுக்கு இந்த அடைவுநிலை போதாது என்றும், விளையாட்டுத் துறையில் அது இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் அத்துறையின் மனோவியல் நிபுணர் முனைவர் அண்ணாதுரை இரங்கநாதன் கூறினார். 

இந்த ஒலிம்பிக்கில் முக்குளிப்பு, நீச்சல், பூப்பந்து, சைக்கிளோட்டம், கோல்ஃப், அம்பெய்தல், திடல் தட மற்றும் எடை தூக்குதல் என்று மலேசியா மொத்தம் 9 பிரிவுகளில் களமிறங்கியது. 

ஆனால்,  பூப்பந்து விளையாடில் மட்டுமே அது இரு வெண்கலங்களை வென்றது. 

மானியம், ஒதுக்கீடு, உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் ரீதியில், பூப்பந்து விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதர போட்டிகளுக்கும் வழங்கினால், அதன் வீச்சும் நாட்டிற்கான முதல் தங்கப் பதக்க இலக்கும் நிறைவேற வாய்ப்புள்ளதாக முனைவர் அண்ணாதுரை இரங்கநாதன் தெரிவித்தார். 

அதேவேளையில், விளையாட்டு சங்கங்களுக்கும் விளையாட்டாளர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டினால், தகுதியான போட்டியாளர்கள் விடுபடும் நிலையில், அத்தகையப் போக்கு இருக்கக் கூடாது என்றும் அவர் வலிறுத்தினார். 

இதனிடையே, பூப்பந்து விளையாட்டில், நாட்டின் தேசிய ஆடவர் இரட்டையர்களான ஆரோன் சியா - சோ வு இக், ஒற்றையர் விளையாட்டாளர் லீ. சி ஜியா மற்றும் முயன்று தோற்ற மகளிர் இரட்டையர்கள் பெர்லி தான் - எம் தீனா ஆகியோருக்காக, இனம் மதங்களைக் கடந்து  மலேசிய மக்கள் அளித்த ஆதரவு குறித்தும் முனைவர் அண்ணாதுரை புளங்காகிதம் அடைந்தார். 

''மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டை நேசித்து விளையாட்டு வீரர்களுக்காக ஆதரித்து அமோக ஆதரவை வழங்கினார். உண்மையிலேயே அது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தது'', என்றார் அவர்.

ஆயினும், வெற்றித் தோல்வியைக் கடந்து நாட்டின் ஒரு விளையாட்டாளரைத் தரம் தாழ்ந்து, சமூக ஊடகங்களில் விமர்ச்சிப்பது மிகவும் கண்டிக்கதக்கது என்று சாடிய முனைவர் அண்ணாதுரை, அத்தகையச் செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.  

ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவின் அடைவுநிலை மற்றும் மலேசியர்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு துறையின் பங்களிப்பு தொடர்பில் பேசியபோது முனைவர் அண்ணாதுரை பெர்னாமா செய்திகளிடம் அக்கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)