பொது

நீதிபதி செக்குவெராவை வெளியேற்றும்படி செய்த மேல்முறையீட்டை நஜீப் மீட்டுக் கொண்டார்

20/08/2024 04:09 PM

கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாம் எதிர்நோக்கியிருக்கும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை செவிமடுப்பதில் இருந்து நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செக்குவெராவை வெளியேற்றும்படி செய்த மேல்முறையீட்டை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று மீட்டுக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நீதிபதி டத்தோ சே முஹமட் ருசிமா கசாலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றக் குழு, அந்த மேல்முறையீட்டை ரத்து செய்தது.

தேவையிருந்தால், முதன்மை மேல்முறையீட்டில் நீதிபதியை நீக்குவது குறித்த பிரச்சனையை எழுப்பலாம் என்று நீதிபதி டத்தோ அஹ்மாட் சைடி இப்ராஹிம் மற்றும் நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லாவுடன் இணைந்து விவாதித்தப் பின்னர் நீதிபதி சே முஹமட் ருசிமா தெரிவித்தார்.

தமது மேல்முறையீட்டை மீட்டுக் கொள்ளும்படி நஜீப்பிடமிருந்து தமக்கு உத்தரவு கிடைத்ததாக வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷஃபியி அப்துல்லா நீதிமன்றத்திடம் கூறினார்.

ஏனெனில், 1MDB வழக்கு விசாரணையில், 1MDB-இன் மூத்த வழக்கறிஞர் ஜஸ்மின் லூ அய் ஸ்வான் 10 நாள்களாக தமது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இதனிடையே, தமது தரப்பிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கமால் பஹ்ரின் ஒமார் தெரிவித்தார்.

தாம் எதிர்நோக்கும் வழக்கு விசாரணையிலிருந்து, நீதிபதி செக்குவெராவை நீக்கும்படி செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நஜீப் மேல்முறையீட்டைச் செய்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]