பொது

ஆசியான் உச்சநிலை மாநாடு; வட்டார நாடுகளுடன் மலேசியா நெருக்கமாக ஒத்துழைப்பு

21/08/2024 05:26 PM

புது டெல்லி, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியா, இந்தியா உட்பட வட்டார நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும்.

ஆசியானில் நீண்ட காலமாக உறுப்பியம் கொண்டுள்ள இந்தியா, இதனை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வட்டாரம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் ஆசியான்-இந்தியா கூட்டணி முக்கிய பங்கு வகிப்பதாக அன்வார் தெரிவித்தார்.

''இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பெரும் ஆற்றலைக் காண்கிறோம், குறிப்பாக உலகளாவிய தெற்கை ஆதரிப்பதன் வழி ஆசியானின் முன்னுரிமைகளைச் சீரமைக்க முயல்கிறோம்,'' என்றார் அவர்.

மலேசியா தற்போதுள்ள ஆசியான் வழிமுறைகள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், வட்டார வளர்ச்சி மற்றும் செழுமைக்கு முக்கியமான பிற தரப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)